The trains will halt for 30 seconds in each station.
ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
ஆலந்தூர்-கோயம்பேடு இடையே இன்று 29-06-2015 (திங்கட்கிழமை) முதல் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையை தொடங்கி வைக்கிறார்.
அத்துடன் அந்த வழித்தடத்தில் உள்ள கோயம்பேடு, கோயம்பேடு பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் பணிமனை ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்.
இதன்மூலம் சென்னை நகர மக்களின் நீண்டநாள் கனவான மெட்ரோ ரெயில் போக்குவரத்து இன்று நனவாகிறது.
போக்குவரத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்ததும் முதல் மெட்ரோ ரெயில் ஆலந்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கோயம்பேடுக்கு செல்லும், அதேபோன்று கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் நோக்கி மற்றொரு மெட்ரோ ரெயில் புறப்பட்டு செல்லும்.
காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ச கட்டணம் 10 ரூபாய் எனவும், அதிகபட்ச கட்டணம் 40 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஆலந்தூரில் இருந்து ஈக்காட்டு தாங்கல் வரை செல்ல கட்டணம் 20 ரூபாய் எனவும், ஆலந்தூரில் இருந்து வடபழனி செல்ல கட்டணம் 30 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு-ஆலந்தூர் இடையே 10.1 கிலோ மீட்டர் தூரத்தை 18 நிமிடங்களில் ரெயில் கடக்கும். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் 30 வினாடி ரெயில்கள் நின்று செல்லும். ஒவ்வொரு ரெயிலிலும் 176 இருக்கைகளும், 1,100 பேர் நின்று செல்லும் வகையிலும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சராசரியாக ஒரு மார்க்கத்தில் ஒரு மணி நேரத்தில் 30 ஆயிரம் பேர் பயணம் செய்ய முடியும்.
மெட்ரோ ரெயில் நிலையங்கள் பிரமாண்டமான முறையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் 2 ஏ.டி.எம். எந்திரங்கள், குடிநீர் வசதி, இருக்கை வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன.
குளிரூட்டப்பட்ட ரெயில் பெட்டிகள், தடையற்ற மின்சார வசதி, குறைந்த பயண நேரம் போன்ற வசதிகளை மெட்ரோ ரெயில் கொண்டு உள்ளது.
அனைத்து ரெயில் நிலையங்களுமே 2-வது மாடியில் தான் அமைந்துள்ளன. வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் எளிதாக ரெயிலில் ஏறுவதற்காக தரைதளத்தில் இருந்து லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்கள்) அமைக்கப்பட்டு உள்ளன.
ஒரு லிப்டில் 13 நபர்கள் செல்லலாம். மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலிகளை நிறுத்தும் வசதியும், பார்வையற்றவர்கள் லிப்டை எளிதாக இயக்கும் வண்ணம் பிரெய்லி பொத்தான்களும், தானியங்கி மீட்பு சாதன வசதிகளும் இருக்கின்றன